ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதியின் படி சரணடைந்தோர் பட்டியல், தடுப்பு முகாம்களில் இருந்தோர், இருப்போர் உள்ளிட்ட பட்டியல்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(15) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இங்கு அவர்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதியைச் செயலாக்கும் வரை எமது போராட்டம் தொடரும். ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.
ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதியின் படி சரணடைந்தோர் பட்டியல், தடுப்பு முகாம்களில் இருந்தோர், இருப்போர் உள்ளிட்ட பட்டியல்கள் தொடர்பாக உரிய தரப்புக்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கும், அப்பட்டியல்கள் வெளிவருவதற்கும் தேவையான அழுத்தத்தைப் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல்கட்சித் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், தெற்கு முற்போக்குச் சக்திகள், சர்வதேச சிவில் சமூகம், புலம்பெயர் மக்கள், சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
எங்கள் உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரிக் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாகப் பல தரப்பட்டவர்களின் வழிநடாத்துதலில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டோம்.
இந்தப் போராட்டங்கள் எதுவும் எங்களுக்கு உரிய பலனைப் பெற்றுத் தராத காரணத்தால் நாமாகவே போராட முடிவெடுத்தோம்.
அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம்-20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தோம்.
எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டங்களை ஆரம்பித்துத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் எமது கோரிக்கைகளடங்கிய மகஜர்களை ஜனாதிபதி உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருக்கும் கையளித்திருந்தோம்.
ஆனால், எந்தத் தரப்பினரும் எம்மைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இந்த நிலையில் கடந்த சித்திரை மாதப் புத்தாண்டு தினத்தன்று நாமனைவரும் கறுப்புடை அணிந்து வீதியோரத்தில் பதாதைகளுடன் அமர்ந்திருந்து புத்தாண்டு தினத்தைத் துக்கதினமாக அனுஷ்டித்தோம்.
இதனையும் எவரும் பொருட்படுத்தாமையால் கடந்த ஏப்ரல் மாதம்-27 ஆம் திகதி நாம் பூரண கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததுடன் அனைவரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் மேலாகத் திடீர் வீதிமறியல் போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தோம்.
ஆனால், எமது இந்தப் போராட்டத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் எவரும் கண்டுகொள்ளவில்லை. இதன் பின்னர் நாம் எமது போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த மேமாதம்-30 ஆம் திகதி பல்வேறு அமைப்புக்களினதும் ஆதரவுடன் பாரிய போராட்டமொன்றை மேற்கொண்டோம்.
சர்வமதப் பிரார்த்தனையைத் தொடர்ந்து வீதி மறியல் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தோம். இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் எம்மை நேரில் வந்து சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீங்கள் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஒழுங்குகள் செய்து தருவதாகக் கூறியிருந்தார்.
ஆனால், நாம் ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டுமென்பதிலேயே உறுதியாகவிருந்தோம். இதனையடுத்து ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருவதாகக் கூறியிருந்தார்.
ஆனால், அதற்கிடையில் வடமாகாண ஆளுநர் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஜனாதிபதியுடன் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக உறுதிமொழி வழங்கினார். அவரது உறுதிமொழியை எழுத்துமூலம் வழங்க வேண்டுமெனக் கேட்டிருந்தோம். அவர் உடனடியாக ஒரு கடிதமொன்றைக் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் ஊடாக அனுப்பியிருந்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக இந்தக் கடிதம் அனுப்பப்படுவதாகவும், பத்து நாட்களுக்குள் ஜனாதிபதி எம்மைச் சந்திப்பார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கமைவாக இந்த மாதம்- 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியை நாம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். இந்தச் சந்திப்பின் போது எமது போராட்டத்தின் பின்புலங்கள், கோரிக்கைகள் என்பன தொடர்பாக எழுத்துமூலமான மகஜரொன்றை ஜனாதிபதியிடம் கையளித்தோம்.
எமது கோரிக்கைகளுக்கமைய சரணடைந்தோர் பட்டியல், தடுப்பு முகாம்களில் இருந்தோர், இருப்போர் உள்ளிட்ட பட்டியல்களை 13-06-2017 அன்று நடைபெறவிருக்கும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தில் உரிய தரப்புக்களுக்கு வெளியிட வேண்டும் என உத்தரவிடுவதாக உறுதியளித்திருந்தார். எனினும் இந்த உத்தரவு இடப்பட்டதா? என்பது தொடர்பில் எமக்கு இதுவரை தகவலில்லை என சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதேவேளை, கடந்த-12 ஆம் திகதி யாழில் ஜனாதிபதியைச் சந்தித்து வடக்கு, கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கையளித்த மகஜரும் இந்த ஊடக சந்திப்பின் போது ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS