திருகோணமலை – பாலையூற்று பகுதியில் கொள்ளையிடப்பட்ட 13 பவுன் தங்க நகைகள் திருகோணமலை தலைமையகக் காவல்துறையின் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டதுடன் குறித்த குற்றச்செயலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மூன்று மாத காலத்திற்கு முன்பு திருகோணமலை – பாலையூற்று பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு குடியேறிய குறித்த குடும்பத்தினர் அயல் வீட்டாருடன் தமது குழ்ந்தையின் மூலமாக நட்புறவினை சம்பாதித்து சந்தேகம் ஏற்படாதவாறு சகஜமாகப் பழகிய பின்னர், திருமண வீடின்றிற்கு செல்வதற்காக தங்க நகைகள் தேவைப்படுவதாக அயலவர்களை ஏமாற்றி கைமாற்றாக வாங்கிக்கொண்டு குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச்சென்ற குறித்த குடும்பத்தினரை நேற்றையதினம் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வைத்து கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் குறித்த குற்றச்செயல்களை நீண்டகாலமாக மேற்கோண்டு வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்
மேலும் அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது குழந்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.