தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஜெயலலிதாவை போல் ஆளுமை மிக்க தலைவராக செயல்பட்டு நிறைய பணிகளை செய்வேன் என ஜெ.தீபா கூறியுள்ளார்.
புதிய தலைமுறை டிவிக்கு ஜெ.தீபா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,
தற்போதைய சூழலில் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வில்லை. மக்களும் ஆட்சியாளர்கள் மீது வெறுப்புடன் உள்ளனர். எனவே ஆட்சியை கலைத்து தேர்தலை நடத்துவது தான் சரியாக இருக்கும். ஒரு அரசியல் தலைவர் இறந்த பின்னர் அடுத்து அவர்கள் வாரிசு வருவது இயற்கை தான். நான் தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு.
ஜெயலலிதா இருக்கும் போது சசிகலாவை அரசியல் வாரிசு என குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும் போது அவர் எப்படி அரசியல் வாரிசாக முடியும். இரட்டை இலையை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. என் தொண்டர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நான் எதற்கும் பயப்பட மாட்டேன், பின்வாங்க மாட்டேன்.
எனக்கு ஜெயலலிதாவின் உருவ ஒற்றுமை மட்டுமே உள்ளது. ஆளுமை திறமை இல்லை என சமூக வலைதளங்களில் வரும் கேலி, கிண்டல்கள் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. எனது பேரவை பணிகளை கூட செய்ய முடியாமல் சசிகலா தரப்பினர் தடுக்கின்றனர். தேர்தல் நடைபெறட்டும். என்னை முதல்வராக்கினால் ஜெயலலிதா போல் ஆளுமை மிக்கவராக செயல்பட்டு நிறைய பணிகளை செய்வேன். இவ்வாறு தீபா கூறியுள்ளார்.