வடமாகாண புதிய அமைச்சர்கள் தெரிவிற்கு தமிழரசு கட்சி வழங்கிய பரிந்துரைகளையும் கவனத்தில் எடுப்பதற்காகவே தற்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் புதிய அமைச்சர்கள் தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
புதிய அமைச்சர்கள் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடைய கருத்துக்கள் அறியப்படவேண்டிய தேவை உள்ளது.
இந்நிலையில், தமிழரசு கட்சியும் தமது பரிந்துரைகளை வழங்கியிருக்கின்றது.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வருகை தந்த பின்னர் அவருடனும் பேசியே நிரந்தர அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
அந்த வகையில் அவசரமான தேவையாகவே 3 மாதங்களுக்கு தற்காலிக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதேவேளை 3 மாதங்கள் நிறைவில் தற்காலிக அமைச்சர்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.