துரோகி யார்? தமிழ் மக்களின் உரிமைத் தலைவனாக மாற முயற்சிக்கும் கருணா - Eelatheepam Sri Lankan Breaking NEWS

துரோகி யார்? தமிழ் மக்களின் உரிமைத் தலைவனாக மாற முயற்சிக்கும் கருணா

வடமாகாண சபையின் குழப்பமானது இப்போதைய சூழலில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளதோடு, அது ஓர் தீர்வு நிலையை எட்டக் கூடிய நகர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போதைய நிலையில் இந்தக் குழப்பங்கள் ஏற்பட்டதன் பின்னணி என்ன? என்ற நோக்கத்தில் சிந்திக்கும் போது தெற்கின் அரசியல் சதியும் இதில் இருக்கலாம் என்ற வாதப்பிரதிவாதங்களும் அரசியல் அவதானிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கான முக்கிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்படுமாயின் அது எதிர்கால அரசியல் சூழ்நிலைகளிலும், தமிழ் மக்களிடையேயும் மாற்றத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறிவிடும்.
நிலைமை இவ்வாறு இருக்க வடக்கு பிரச்சினையை மையமாகக் கொண்டு புதிய அரசியல் காய் நகர்த்தல்கள் ஆரம்பமாகி விட்டதனை அவதானிக்க முடியுமானதாக இருக்கின்றது.
அதல் பிரதானமாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வடக்கு தமிழ் மக்களிடையே ஆதரவு திரட்டும் முகமாகவும், தமிழர்களின் அடுத்த தலைவராகவும் மாற முயற்சி செய்து வருகின்றார்.
நேற்றைய தினம் வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்த கருத்துகள் குழப்பத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த மேதினக் கூட்டத்தில் தமிழ்க்கட்சிகளை விரட்டியடிக்கவே நாம் புதிதாக கட்சியை ஆரம்பித்தோம் என்று கூறியிருந்தார் முரளிதரன்.
மேலும், மகிந்த ராஜபக்ச காலத்தில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு பாரிய சேவைகள் ஆற்றப்பட்டதாகவும், இப்போது அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
தமிழ் மக்களுக்கு முறையான தலைமைத்துவம் இல்லை. இப்போதைய சூழ்நிலையில் தமிழ்க் கட்சிகள் இனவாதத்தை பரப்பிக் கொண்டு வருகின்றன.
அவற்றை விரட்டியடிக்க எமது புதுக்கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மகிந்த மாபெரும் தலைவர் அவருக்கு பின்னாலேயே நாம் செல்ல வேண்டும் எனவும் கருணா மேதினத்தில் தெரிவித்திருந்தார்.
அண்மைக்காலமாக மகிந்தவின் மேடையில் தமிழ்க்கட்சிகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டு மகிந்தவிற்கு ஆதரவு திரட்டும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டு வருபவரே கருணா.
அவரின் கருத்துகளுக்கும், அடுத்த கட்ட அரசியல் நகர்விற்கும் சரியான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்திருந்த வேளையில் வடமாகாண சபையின் குழப்பம் அதற்கான வாய்ப்பளித்து விட்டது.
இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்காக வவுனியாவில் கலந்துரையாடலை மேற்கொண்ட கருணா மிக முக்கியமான கருத்துகள் சிலவற்றைக் கூறியிருந்தார்.
தன்னை புதுக்கட்சி ஒன்றினை ஆரம்பிக்குமாறு வெளியில் உள்ள விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர்களும், இந்தியாவும், வெளிநாட்டு அரசுகளும், உள்நாட்டு அரசு என அனைத்தும் அழுத்தங்களைப் பிரயோகித்தன என்று கூறியிருந்தார்.
மேலும், சுதந்திரக்கட்சியில் உயர்ப்பதவியில் இருந்த ஒரே தமிழன் நான். ஆனால் அவற்றை தூக்கி எறிந்தேன் காரணம், எப்போதும் சிங்களக்கட்சிக்கு அடிபணிந்து இருக்க மாட்டேன் என்பதற்காக.
நான் தேர்தல்களில் வாக்குகேட்டு போகவும் இல்லை. ஆனால் பதவிகள் தானாக வந்தன. விடுதலைப்புலிகளுடனான போரில் பல போராளிகளைக் காப்பாற்றியது நானே.
அனைவரும் கருணா காட்டிக்கொடுத்ததாலேயே இயக்கம் தோற்றதாக கூறுகின்றார்கள். கருணா வெளியேறியது மட்டுமே ஆனால் காட்டிக்கொடுக்கவில்லை. புலிகள் தோற்றதற்கு நான் காரணம் அல்ல.
மாவீரர் தினத்தில் குத்துவிளக்கு ஏற்றுபவர்களுக்கும், மேடையில் பேசிக் கொண்டு இருப்பவர்களுக்கும் எந்தத் தகுதியும் இல்லை. இப்போதைக்கு ஓர் புதுமையை உண்டு பண்ண வேண்டும்.
ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட வேண்டும். பழைய காலத்தினைப்போன்று ஓர் கட்டமைப்பைக் கொண்டு வரவேண்டும். ஆனால் துப்பாக்கி நமக்கு அவசியம் இல்லை.
மகிந்த பதவியிலும், நானும் அமைச்சராக இருப்பேன் என்றால் 2 தினங்களுக்குள் கேப்பாப்புலவு மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பேன். இவை கருணா நேற்றைய தினம் கூறிய கருத்துக்கள்.
அவரின் மொத்த உரையின் சாரம், கருணா ஓர் துரோகி அல்ல, குற்றவாளிகள் விடுதலைப்புலிகளே. அவர்கள் தோற்றதற்கு அவர்களே காரணம். தமிழ் மக்களுக்கு தீங்கிழைத்தவர்கள் விடுதலைப்புலிகள். இப்போதைய தமிழ்த் தலைமைகள் முறையாக செயற்படவில்லை.
மகிந்த குற்றம் செய்யவில்லை, இழப்புகளுக்கு காரணம் அவருக்கு கீழ் இருந்த தளபதிகளே என்பதே ஆகும். அவர் இங்கு மகிந்தவையும், தெற்கையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
அதேபோன்று இப்போதைய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆரம்பப் புள்ளி தான் எனவும் அது பிளவடையும் என்பது தனக்கு தெரியும் எனவும் முரளிதரன் கூறியிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
ஆக இப்போதைய சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் அடுத்த தலைவனாக மாற முயற்சி செய்து வருகின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக இதுவரைக்காலமும் மகிந்தவிற்காக மேடையேறி வந்த இவர் தற்போது சிங்களவருக்கு அடி பணிய மாட்டேன் தமிழன் வாழவேண்டும், அதுவும் உரிமையோடு வாழ வேண்டும் எனவும் கூறியுள்ளமை வேடிக்கையான விடயம்.
அது மட்டுமல்லாது தனக்கு விடுதலைப்புலிகளின் உதவி இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ள கருணா, தான் கணக்கு போடுவதும் பில்லியன்கள் மூலமாகவே என்று கூறியுள்ளதன் மூலம் தனது பணச் செல்வாக்கையும் காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்போதைக்கு வடக்கில் ஏற்பட்டுள்ள சிறு பிரச்சினையை சாதமாகப்பயன்படுத்திக் கொண்டு அங்கு தனது அதிகாரத்தை நிலைநாட்ட கருணா முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாக விநாயகமூர்த்தி முரளிதரன் தன்னை தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒருவராகவே சித்தரித்துக் கொண்டு வர ஆரம்பித்து விட்டார் என்றே கூறப்படுகின்றது.
தென்னிலங்கை அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் தொடர்பில் கருத்துகளை வெளியிட்டு வரும் வேளையில், கருணாவும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் தனக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் அவர் தன்னை இன்றும் ஓர் போராளியாக சித்தரித்துக் கொண்டு வருகின்றார் என்பதே தெளிவு எனவும் கூறப்படுகின்றது. அவரின் இந்தக் கருத்துகளுக்கு அரசு விசாரணைகளை மேற்கொள்ளுமா என்பது சந்தேகமே.
ஆக மொத்தத்தில் வடமாகாண சபையின் பிரச்சினை தற்போது வேறு பக்கமாக திசை திருப்பப்பட்டுக் கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
முன்னாள் பிரதியமைச்சரின் கருத்துக்களுக்கு அமைய தெற்கின் விசுவாசியாக, தென்னிலங்கை அரசியலின் தேவைகளை நிறைவேற்றும் வடக்கு தலைவனாக மாற அவர் களமிறங்கி விட்டார் என்பது தெளிவாகின்றதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் 10 வருடகாலங்களாக தெற்கோடு கைகோர்த்து இருந்த விநாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சி பலித்துவிடுமா? தமிழ் மக்களின் ஆதரவு கிடைத்து விடுமா?
தெற்கு அரசியல் நகர்வு எவ்வாறு அமையும் என்பதும் புரிந்து கொள்ள முடியாத குழப்பமான சூழலில் தமிழ் மக்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தமிழ் மக்களிடையே விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அங்கீகாரமும் ஆதரவும் இதுவரை தமிழ் மக்களிடையே காணப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

About UK TAMIL NEWS