நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத் தன்மை பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளர் மொனிகா பின்டோவின் அறிக்கை இலங்கையின் இறைமைக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தவறானதும் பொய்யானதும் தகவல்களால் நிரம்பியுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளர் மொனிகா பின்டோ கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கை தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நேற்று அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றும் போதே நீதி அமைச்சர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் இலங்கை தொடர்பில் சதகமான சில விடயங்கள் இருக்கின்றன.
எனினும், இலங்கையில் தற்போது இருக்கும் நிலைமைகளை திரிபுப்படுத்தி இலங்கையின் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான விடயங்களை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவரின் அறிக்கை அரச சார்பற்ற அமைப்புகளின் அறிக்கைகளை கொண்டே தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில், தனது 7 நாட்கள் விஜயத்தின் போது அரசாங்கத்தின் சில தரப்பினரை மட்டுமே சந்தித்த மொனிகா பின்டோவினால் இலங்கை பற்றி இப்படியானதொரு அறிக்கையை தயாரித்துள்ளார்.
மேலும், அவரின் இந்த அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக பதிலளிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.