வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது.
வடமாகாண சபையின் 96ஆவது சிறப்பு அமர்வு, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடியுள்ளது
ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதன்படி வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் தமது நிலைப்பாட்டை கூறுவதற்கு இன்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதலில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
“நீதிக்கு புறம்பாக விசாரணைக் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. முதலமைச்சர், விவசாய அமைச்சிலிருந்து வெளியேறுமாறு கேட்டால் வெளியேறுவேன்.
விசாரணைக் குழுவின் நம்பகத் தன்மையிலும், நடுநிலையிலும் சந்தேகம் உள்ளது” எனவும், மேலும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
தன்னிலை விளக்கத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முடித்துக்கொண்டதுடன் 15 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.