கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற கனரக வாகனமொன்று இராணிவத்தை நோனாதோட்டம் பாலத்தில் செல்லும் போது, பாலம் உடைந்து விழுந்ததால் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை பேரம் தோட்டத்திற்கு தேயிலை செடிகளுக்கான உரங்களை ஏற்றிச்சென்ற குறித்த கனரக வாகனம் விபத்துக்குள்ளாகியதால் அப்பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கனரக லொறியில் சுமார் 16 டொன் உரமூட்டைகள் இருந்துள்ள நிலையில் விபத்தை தொடர்ந்து அவை பாதுகாப்பாக மற்றைய லொறி ஒன்றுக்கு தொழிலாளர்கள் மூலம் ஏற்றப்பட்டுள்ளது.
எனினும் இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை லிந்துலைப் பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.