ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மாதிரியான ஒருவர் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ” தீர்க்கமான, அல்லது தெளிவான முடிவு ஒன்றை எடுப்பதற்கு, ஆளுமையுடன் செயற்படுவதற்கான ஒரு தயக்கம் தென்னிலங்கையில் ஆங்காங்கே இருக்கின்றன.
வடக்கு முதலமைச்சர் மீது தீவிரவாதி, புலி ஆதரவாளர், இனவாதி என்றெல்லாம் தென்னிலங்கை அரசியல் வாதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும், அதனையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வடக்கு முதலமைச்சரை ஒரு முன்மாதிரியாக தென்னிலங்கை அரசியல் வாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வடமாகாண அமைச்சரவையில் ஊழல் குற்றச்சாட்டு வந்த போது அதனை விசாரிக்க ஆணைக்குழு ஒன்று அமைத்து, உரிய அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இலங்கையில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. நாடாளுமன்றிலும் சமர்பிக்கப்படவில்லை.
ஆனால் வடமாகாண முதலமைச்சர் அவ்வாறில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, தென்னிலங்கையில் உள்ள அரசியல் வாதிகளை வடக்கு முதலமைச்சரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாக அமைச்சர் மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளார்