தற்போதைக்கு மதத் தலைவராக நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஞானசார தேரரை அடுத்த ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளவும் மக்கள் தயாராக இருப்பதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், இந்நாட்டில் இன்று பௌத்தர்களுக்கு எதிராக பாரிய அழிவுகள் நடைபெற்று வருகின்றது. கிழக்கில் தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்றோர் இது தொடர்பில் எந்தவித கவனமும் செலுத்துவதில்லை.
அவர்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற சிறுபான்மை வாக்குகள் தேவைப்படுவதன் காரணமாக அவர்கள் எல்லாம் அறிந்து வைத்திருந்தும் மௌனமாக இருக்கத் தலைப்பட்டுள்ளனர்.
அதே நேரம் இவ்வாறான விடங்கள் குறித்து சம்பிக ரணவக்கவோ, அதுரலியே ரத்ன தேரரோ நாடாளுமன்றத்தில் வாய் திறப்பதில்லை. அவ்வாறு அவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி எமது பிரச்சினைகள் தொடர்பில் தேசிய, சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் ஞானசார தேரர் அனைத்தையும் கைவிட்டு மௌனமாக இருக்கத் தயார்.
இந்த நாடு மற்றும் பௌத்தர்களின் எதிர்காலம் மட்டுமே எங்களுக்கு முக்கியம். நாட்டின் நலனுக்காக இந்த நாட்டை விட்டு வெளியேறவும் நாங்கள் தயார்.
ஆனால் அதற்கு முன்னதாக பௌத்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுவதற்கான உறுதிப்பாடு வேண்டும்.
தற்போதைக்கு இந்நாட்டின் பெரும்பாலான மக்கள் ஞானசார தேரரை ஒரு மதத் தலைவராக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.
பௌத்தர்களுக்கு எதிரான நிலை தொடர்ந்தும் இப்படியே நீடித்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது இந்நாட்டின் ஜனாதிபதியாக ஞானசார தேரரை தேர்ந்தெடுக்கவும் பொதுமக்கள் தயாராக இருக்கின்றனர் என்றும் மாகல்கந்தே சுதந்த தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்