சத்தான கேழ்வரகு குலுக்கு ரொட்டி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சத்தான கேழ்வரகு குலுக்கு ரொட்டி

தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 200 கிராம்
எண்ணெய் – சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை – 25 கிராம்
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
பாகு செய்ய :
வெல்லம் – 400 கிராம்
தண்ணீர் – 400 கிராம்

செய்முறை :
* வேர்கடலையை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* கேழ்வரகு மாவையும் உப்பையும் கலந்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிருதுவாகப் பிசைந்து மூடி போட்டு பத்து நிமிடம் தனியாக வைக்கவும்.
* அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும், பிசைந்த மாவை சிறு உருண்டையாக பிடித்து எடுத்து தவாவின் நடுவில் வைத்து கைகளால் தட்டி தட்டி தட்டையாக ஆக்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு பிரவுன் நிற புள்ளிகள் வரும் வரை ஐந்து நிமிடம் வேக விடவும். ரொட்டி முக்கால் பதம் வேகவேண்டும். மறுபுறமும் இதேபோல வேகவிட்டு எடுத்து தட்டில் வைக்கவும். இதேபோல மீதம் இருக்கும் உருண்டைகளையும் வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
* வேகவைத்த ரொட்டிகளை எல்லாம் உடைத்து மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வெல்லத்தைச் சேர்த்துக் கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் பாகு தண்ணீரை அடுப்பில் வைத்து தீயைக் குறைத்து பாகு பிசுபிசுப்பு பதம் வர ஆரம்பிக்கும் போது உடைத்த ரொட்டித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி விடவும்.
* அடுத்து அதில் ஏலக்காய்த்தூள், பொடித்த வேர்க்கடலையை தூவி அடுப்பை அணைத்து ஆற விட்டு மூடி போட்டு இரவு முழுவதும் ஊற விடவும்.
* இதனை ஒரு டப்பாவில் சேர்த்து இரண்டு நாட்கள் வெளியே வைத்து, பின்பு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
* சத்தான கேழ்வரகு குலுக்கு ரொட்டி ரெடி.
குறிப்பு: ரொட்டியை அதிக நேரம் தவாவில் சூடுபடுத்தி வேக விடக்கூடாது. இப்படிச் செய்தால், ரொட்டி இறுக்கமாகி சுவைக்கக் கடினமானதாகி விடும். ஒருவேளை ரொட்டியானது வெல்ல பாகு மொத்தத்தையும் உறிஞ்சிக்கொண்டால், தேவையான அளவு தண்ணீரை ரொட்டியில் விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து சூடுபடுத்தி, பின்பு இறக்கி சாப்பிடலாம். சத்துமிக்க உணவான இதை குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்கலாம்.

About UK TAMIL NEWS