ஜனநாயகத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்: பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் அழைப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஜனநாயகத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்: பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் அழைப்பு

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மான் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவ்வகையில், இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
1975-ம் ஆண்டில் இதேநாளில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்த மிசா என்ற அடக்குமுறை சட்டம் பிரகடணப்படுத்தப்பட்ட அந்த கருப்பு இரவை எதிர்த்து ஜனநாயக விரும்பிகள் நடத்திய போராட்டத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நிச்சயமாக, எந்த ஒரு இந்தியராலும் அந்த நாளை மறந்துவிட முடியாது.
ஜனநாயகம் என்பது நமது ஆட்சிமுறை மட்டுமல்ல.., நமது கலாச்சரமே ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆனதுதான். மிசா காலத்தில் ஜனாநாயகத்துக்கு ஊறுவிளைவித்த அவசர சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் நன்மைகளைப் பற்றி மக்களை உணரவைத்த பல சம்பவங்களையும் நாம் நினைவுகூர வேண்டியது அவசியமாகும்.
அன்று ஒருவகையில் இந்த நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ஜெய்பிரகாஷ் நாராயண் உள்பட மிக முக்கிய தலைவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவசர சட்டத்தின் கருப்பு நிழலில் இருந்து நீதித்துறை கூட தப்பவில்லை. ஊடகங்கள் இருந்தும் இயங்க முடியாமல் பயனற்றுப் போனது.
இன்று ஊடகத்துறை தொடர்பான கல்வியைப் பயிலும் மாணவர்களும் ஜனநாயகம் தழைக்க பாடுபடுபவர்களும் இந்த கருப்பு சம்பவத்தை நினைவில் வைத்து அவசரநிலை சட்டத்தினால் நேர்ந்த கேடுகளையும், ஜனநாயகத்தின் உயர்மதிப்பையும் தெளிவுப்படுத்தும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அடல் பிகாரி வாஜ்பாய் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இந்த அடக்குமுறையை எதிர்த்து மிக சிறந்த கவிதை ஒன்றை இயற்றினார். (அந்த கவிதையின் சில வரிகளை பிரதமர் மோடி வாசித்தும் காட்டினார்)
இந்த அடக்குமுறைக்கு எதிராக நாட்டு மக்கள் கொதித்தும், கொந்தளித்தும் எழுந்தனர். நாடு தழுவிய அளவில் எழுந்த பெருவாரியான எதிர்ப்பையடுத்து இந்த சட்டத்தை பிரகடணப்படுத்திய இந்திரா காந்தி இரண்டாண்டுகளுக்குள் அதை திரும்பப்பெற நேர்ந்தது.
ஒவ்வொரு இந்திய மக்களின் இதயங்களிலும் ஜனநாயகம் என்னும் சித்தாந்தம் எவ்வளவு ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதை ஜனநாயக விரும்பிகள் தங்களது போராட்டங்களின் வீரியத்தின் வாயிலாக அன்றைய அரசுக்கு தெளிவுபடுத்தி காட்டினர்.
பின்னர் நடைபெற்ற தேர்தலிலும் அவர்களின் எதிர்ப்புக்குரல் எதிரொலித்தது. அதுதான் நமது பாரம்பரியம். இந்த பாரம்பரியத்தை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

About UK TAMIL NEWS