பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘60 நாட்கள் பொறுமை காக்குமாறு சசிகலா அறிவுறுத்தியுள்ளார்’ என்றார். இனி கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார். சென்னை திரும்பிய அவரை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதுவரை அவருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருடைய சகோதரர் சுதாகரனை டி.டி.வி.தினகரன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். மாலை 4.15 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர் மாலை 4.55 மணியளவில் வெளியே வந்தார். சுமார் 40 நிமிடங்கள் சுதாகரனுடன் அவர் பேசினார். அப்போது சுதாகரனிடம் அவர் உடல் நலம் விசாரித்தார். பின்னர் அவர் தமிழகத்திற்கு புறப்பட்டு சென்றார்.
டி.டி.வி.தினகரனுடன் டாக்டர் வெங்கடேஷ், கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் வா.புகழேந்தி ஆகியோர் இருந்தனர். இதுகுறித்து புகழேந்தி கூறுகையில், “கடந்த 5-ந் தேதி வந்தபோது சுதாகரனை அவரால் சந்திக்க முடியவில்லை. அதனால் இப்போது சுதாகரனை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த விஷயம் திடீரென முடிவானதால் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. சசிகலாவை அவர் சந்திக்கவில்லை. இன்னொரு நாள் அவர் சசிகலாவை மீண்டும் சந்திப்பார்” என்றார்.
கடந்த முறை அவர் சசிகலாவை சந்திக்க வந்தபோது, சிறை முன் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர். ஆனால் நேற்று டி.டி.வி.தினகரன் வருகை குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததால், பத்திரிகையாளர்கள் யாரும் சிறை பகுதிக்கு வரவில்லை.