வடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
வடமாகாண சபையின் நிலைமை தொடர்பில் லங்காசிறியின் ஊடக சேவைக்கு அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபையின் நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். எனினும் இது வரையில் வடமாகாண முதலமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன.
இதில் பொதுவான கருத்து என்னவென்றால் குற்றம் சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற அமைச்சர்கள் தொடர்பில் மாத்திரமே முதலமைச்சரால் நடவடிக்கை எடுக்க முடியும். ஏனைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்பதே இந்த பிரச்சினைக்கு காரணம்.
அத்துடன், நான் அவருடன் இந்த விடயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கதைத்திருந்தேன். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் நீங்கள் சுதந்திரமாக செயற்படலாம். ஆனால் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நான் கூறினேன்.
அதன்போது இந்த விடயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதாக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.