விக்னேஸ்வரனுடைய சேவை வடக்கில் தொடர வேண்டும் : முஸ்லிம் சமூகத்தினருடன் முதல்வர் சந்திப்பு!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

விக்னேஸ்வரனுடைய சேவை வடக்கில் தொடர வேண்டும் : முஸ்லிம் சமூகத்தினருடன் முதல்வர் சந்திப்பு!!

மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ நீதியும் நியாயமும் உள்ள உன்னதமான மனிதரான வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடைய சேவை வடக்கில் தொடர்ச்சியாக நிலைத்து நிற்க வேண்டும் என முஸ்லிம் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மௌலவி அஸீஸ் காசிமி தலைமையில் வடக்கில் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்குமான நல்லெண்ண சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் யாழ்.முஹமதியா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
அக் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சபை வினைத்திறனாக இயங்க வேண்டும் எனில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர் ந்தும் தனது சேவையை முன்னிறுத்த வேண்டும்.
அண்மையில் ஏற்பட்ட அரசியல் பிளவுகள் துரதிஸ்டவசமானவை, அரசியல் ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள், ஆனால் சமூக ரீதியில் நாம் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதற்கு நீதியுள்ள மனிதரான முதலமைச்சர் தான் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் சேவை புரிய வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் அனைத்து மக்களிடத்திலும் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் எனில் முதலமைச்சரின் நீதியான அணுகுமுறை அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
குறித்த சந்திப்பின் பின்னர் வடக்கு முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இஸ்லாம் சமய பிரதிநிதிகளுடனான நல்லெண்ண சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தேன். நாம் கிறிஸ்தவ மற்றும் இந்து மத தலைவர்களுடன் பேசிவந்தோம்.அதே போன்று இஸ்லாம் மத தலைவர்களுடனும் பேச வேண்டிய கட்டாயம் இருந்தது அதனடிப்படையில் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளோம்.
மக்களிடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு அந்த முரண்பாடுகள் தீர்க்கமடையும் போது சில பிரச்சினைகள் தோன்றும், அந்த தருணத்தில் சமய சமூக பெயரியார்களுடன் பேசி அவர்களின் நல்லெ ண்ண கருத்துக்களை பெற்றுக்கொள்வது வழக்கம்.
அதன்படி இச் சந்திப்பில் எமக்கு முழுமையான ஆதரவை தருவதாக கூறியுள்ளார்கள் அது தனிப்பட்ட முறையில் இல்லாமல் வடக்கு மாகாண சபை நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதன்படி மக்களின் சேவைகள் சரியாக முறையாக செய்து கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

About UK TAMIL NEWS