சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் அவ்வவ்போது சந்தித்து கட்சி நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு லஞ்சம் கொடுத்ததாக தொரப்பட்ட வழக்கில், டெல்லி திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் கடந்த ஜூன் 5-ம் தேதி சசிகலாவை சிறையில் சந்தித்தார்.
அப்போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கான வெற்றிவேல் (பெரம்பூர்), இன்பதுரை (ராதாபுரம்), தங்கதமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), எஸ்.டி.கே. ஜக்கையன் (கம்பம்), கதிர்காமு (பெரியகுளம்), எதிர்கோட்டை சுப்பிர மணி (சாத்தூர்), ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), பார்த்திபன் (சோளிங்கர்), செல்வ மோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி) ஆகிய 10 பேரும் உடன் சென்றனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ச்சியாக பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 30-ஐ தாண்டியது.
இதனால் அதிமுகவில் மேலும் குழப்பை அதிகரித்தது. இருப்பினும் அதிமுகவில் அனைத்து பிரிவில் உள்ளவர்களும் ஒரே மாதிரியாக ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சந்தித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் முதல் அமைச்சர் பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசிய நிலையில், தம்பிதுரை சசிகலாவை சந்தித்து உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தம்பிதுரையை தொடர்ந்து டிடிவி தினகரனும் சசிகலாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தினகரன் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியாதாக கூறப்படுகிறது. சென்ற முறை போல் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் செல்லாமல் தினகரன் தனியார் சென்றதாக பெங்களூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.