யாழ். உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்னும் நிலக் கண்ணிவெடிகள்: சுவாமிநாதன் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

யாழ். உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்னும் நிலக் கண்ணிவெடிகள்: சுவாமிநாதன்

யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட 27.3 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட பிரதேசங்களில் நிலக் கண்ணிவெடிகள் இன்னும் பரம்பியுள்ளன என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை நிலக் கண்ணிவெடி அபாயமற்றது என்று அறிவிக்கும் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிலக்கண்ணி வெடிகளற்ற மாகாணங்களாக மாற்றி, மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இதுவரையில் இலங்கை அரசாங்கம் 4,000 மில்லியன் ரூபாவையும், வெளிநாட்டு நிறுவனங்கள் 10,000 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளன.
இலங்கையில் 160 சதுர கிலோமீற்றர் பகுதியில் நிலக் கண்ணிவெடிகள் பரவி இருப்பதாக அடையாளம் காணப்பட்டதுடன், நிலக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் 134 சதுர கிலோமீற்றர் பகுதி நிலக் கண்ணிவெடிகளற்ற அபாயமற்ற பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
அத்துடன் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு அமெரிக்கா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, நோர்வே, ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் பல்வேறு வழிகளிலும் உதவி செய்ததுடன், இது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான பயிற்சி மற்றும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளன.
மேலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் திருகோணமலை, அம்பாறை, அநுராதபுரம் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட 27.3 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட பிரதேங்களில் இன்னும் நிலக் கண்ணிவெடிகள் பரம்பியுள்ளன.
எதிர்வரும் 3 வருடங்களில் அவற்றை அகற்றும் பணி பூர்த்தி செய்யப்பட்டு, 2020ஆம் ஆண்டளவில் இலங்கையானது நிலக் கண்ணிவெடிகள் அபாயமற்ற ஒரு நாடாக மாற்றுவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

About UK TAMIL NEWS