வடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி: கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி: கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கனடா விஜயத்தின் போது முதல்வர் நிதியத்துக்காக திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டதாக கனடிய தமிழர் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கனடிய தமிழர் சமூக அமையம், கணக்கு விவரம் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அத்துடன், இது குறித்து கனடிய தமிழர் சமூக அமையத்தினால் ஊடக அறிக்கை ஒன்றும் நேற்று வெளியிட்டுள்ளது,
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
கடந்த சில நாட்களாக ஊடகங்கள், இணையத்தளங்களில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அவர்களது கனடா வருகையின் போது முதல்வர் நிதியத்திற்காகத் திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கப் புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரது கனடா வருகையை பல அமைப்புகளுடனும் சேர்ந்து முன்னெடுத்தவர்கள் என்கின்ற வகையிலும், பிரசுரிக்கப்பட்ட செய்திக் கட்டுரையில் கனடியத் தமிழர் சமூக அமையத்தினுடைய பெயர் குறிப்பிட்டதன் அடிப்படையிலும் இச்செய்தி தொடர்பான உண்மை நிலையை மக்கள் முன்வைக்க வேண்டியது எமது கடமையாகும்.
கனடாவுக்கான முதலமைச்சர் வருகையின்போது நடாத்தப்பட்ட முதல்வர் உதவித் திட்டத்திற்கான நிதி சேர் நிகழ்வின் கணக்கறிக்கையையும் அதனுடன் எமது ஊடக அறிக்கையையும் மே மாதம் 16 ஆம் திகதி 2017 இல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தோம்.
இக் கணக்கறிக்கையில் கையிருப்பலுள்ள பணம் மற்றும் வரவேண்டிய தொகை என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பணம் இது வரையிலும் யாரிடமும் கையளிக்கபடவில்லை.
ஏற்கனவே பேசப்பட்டதன் படி முதல்வரது உதவித்திட்ட அமைப்பில் கனடிய சட்டதிட்டங்களுக்கமையவும் மற்றும் நல்லாட்சிக்கான சில நிர்வாக நடைமுறைகளும் சீரமைக்கவேண்டியமையால் இப் பணத்தினை நாம் இன்னமும் அனுப்பி வைக்கவில்லை.
அவ்விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக இப்பணம் முதல்வரது உதவித் திட்ட அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படும்.
நாம் முன்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த கணக்கறிக்கையையும், எமது ஊடக அறிக்கையையும் மீளவும் இத்துடன் இணைத்துள்ளோம்.
இச் செய்திகள் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகமும் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அனைத்து ஊடகங்கள் இணையத்தளங்களிடம் இவ் உண்மையான விபரங்களை மக்களுக்குத் தருமாறு வேண்டிக் கொள்கிறோம் என கனடிய தமிழர் சமூக அமையம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

About UK TAMIL NEWS