மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக இருந்தால் அது அவைத்தலைவரிடமே கையளிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனினும், என்னுடைய விடயத்தில் அவைத்தலைவரே தானாக முன்வந்து, உறுப்பினர்கள் சிலரை தன் பக்கம் இழுத்துக்கொண்டு ஆளுநரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அவருடைய செயல் சட்டத்திற்கு புறம்பானது. இவ்வாறு பக்கச் சார்பாக நடந்துகொண்ட அவைத்தலைவர் தொடர்ந்தும் அந்த பதவியில் நிலைத்திருக்க முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
“இந்த விடயம் குறித்து எமது அனைத்து உறுப்பினர்களும் விவாதிக்க இருக்கின்றனர். அதன் அடிப்படையில் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகின்றேன்.
இதேவேளை, வடமாகாண கல்வி அமைச்சர் தனது இராஜினாமா கடிதத்தை தருவதாக கூறியிருந்த போதிலும், இதுவரையிலும் இராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.