புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு நேற்றைய தினம் முதன் முறையாக ட்ரயல் அட்பார் முறையில் யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயார் நீதிமன்றில் விம்மி அழுதுகொண்டிருந்தார்.
வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், முதலாம், இரண்டாம், மூன்றாம், ஐந்தாம், மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் மீது பாரதூரமான குற்றங்கள் சுமத்தப்பட்டன.
அத்துடன், குறித்த வழக்கில் சந்தேகநபராக கைது செய்யப்பட்டு அரச சாட்சியாக மாறியுள்ள உதயசூரியன் சுரேஸ்கரன் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் மீது குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதன் போது சந்தேகநபர்கள் மீது 41 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. எனினும், சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.
சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட போது மன்றிலிருந்த வித்தியாவின் தாயார் தொடர்ச்சியாக விம்மி அழுதவண்ணம் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.