ஜெயலலிதா மருத்துவ செலவுக்கு ரூ.6 கோடி காசோலை: அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வழங்கப்படுகிறது - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஜெயலலிதா மருத்துவ செலவுக்கு ரூ.6 கோடி காசோலை: அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வழங்கப்படுகிறது

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 2 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா உயிரிழந்தார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வகையில் ரூ.6 கோடி மருத்துவ செலவு ஆனது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்ததால், அவரது மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மருத்துவ செலவு தற்போது அ.தி.மு.க. (அம்மா) கட்சி சார்பிலேயே வழங்கப்பட உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் ரூ.6 கோடிக்கான காசோலை, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. அவர் இந்த காசோலையை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. (அம்மா) கட்சி செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கான மேற்கொள்ளப்பட்ட மருத்துவ செலவுக்கு எங்கள் கட்சி நிதியில் இருந்தே ரூ.6 கோடிக்கான காசோலை வழங்குகிறோம். முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சீரும், சிறப்புமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. மதுரையில் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. 2 நாட்களில் அதுதொடர்பான விரிவான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிடுவார்.
டி.டி.வி.தினகரன், தன்னால் கட்சிக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். எனவே எங்கள் கட்சி இரண்டாக பிளவுபடவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அவர் துணையாகவே இருக்கிறார். ஏனென்றால் அவர் நல்ல அரசியல் பண்பாளர். அவரை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வருவது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே.இவ்வாறு அவர் கூறினார்.

About UK TAMIL NEWS