குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கொல்கத்தா பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கொல்கத்தா பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: அசோக் நகரில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட, கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, அசோக் நகரை சேர்ந்தவர் அனிதா. பழக்கடை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா, அமுதன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அனிதா கடைவைத்து இருப்பதால் காலையிலேயே வெளியே சென்று இரவு தான் வீட்டுக்கு வருவார். இதனால் குழந்தைகளை அவரது தாயார் கவனித்து கொள்வார். இந்நிலையில், அனிதாவின் மகள் பவித்ரா கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி காலை 11.30 மணியளவில் வீட்டின் வெளியே தெருவில் விளையாடி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு பெண் பவித்ராவுக்கு சாக்லேட் கொடுத்து தன்னுடன் அழைத்துள்ளார். பவித்ரா போகமறுக்க அந்த பெண் பவித்ராவை தாக்கி தெரு முனைவரை இழுத்து சென்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை அடித்து குழந்தையை மீட்டனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த சேனாஜ்பேகம் என்பதும், அவர் இது போன்று பல்வேறு குழந்தை கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி கலைமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியான சேஜினாபேகத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கவுரி அசோகன் ஆஜரானார்.

About UK TAMIL NEWS