லண்டன்: 27 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து : மீட்பு பணிகள் தீவிரம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

லண்டன்: 27 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து : மீட்பு பணிகள் தீவிரம்

மத்திய லண்டனின் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியதால் குடியிருப்புவாசிகளில் பலர் கட்டிடத்தினுள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
27 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் தீ விபத்தில் காயமுற்றோருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்தில் தீயை அணைக்கும் பணிகளில் 40 தீயணைப்பு வாகனங்கள், 200-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கிய பலருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
அதிகாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் மீட்கப்படும் குடியிருப்புவாசிகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
லண்டன் நகர தீயணைப்பு படை சுமார் 40 தீயணைப்பு வண்டிகளை அனுப்பியுள்ளது.  எரிந்துகொண்டிருக்கும் கட்டிடத்திலிருந்து எரிந்து-அணையும் ஒளியைக் கண்டதாகவும், அது ( கட்டிடத்தில் சிக்கியவர்களின்) கைவிளக்கு (டார்ச்) வெளிச்சம் என்று நம்பியதாகவும், இக்குடியிருப்பு முழுவதுமாக பற்றி எரியும் நிலையில் இருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
”நான் சாம்பலில் மூடப்பட்டு இருக்கிறேன், அந்த சம்பவம் அவ்வளவு மோசமாக உள்ளது,” என்று சேனல் 4 டிவி நிகழ்ச்சியின் அமேசிங் ஸ்பேஸின் தொகுப்பாளர் ஜார்ஜ் கிளார்க், ரேடியோ5க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
”நான் ஒரு 100 மீட்டர் தூரத்தில் உள்ளேன். நான் முழுவதுமாக சாம்பலால் மூடப்பட்டு உள்ளேன்,” என்றார் அவர்.
”அந்த கட்டிடம் முழுவதுமாக எரிந்துள்ளது,” என்று சம்பவத்தை நேரில் பார்த்த டிம் டௌனி என்ற மற்றொருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
”அந்த கட்டிடம் முற்றிலும் எரிந்துபோய்விட்டது,” என்றார் அவர்.
”நான் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை. எத்தனை பெரிய தீ விபத்து சம்பவம். முழு கட்டிடமும் நொறுங்கிப் போகிறது. கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியாகிறது,” என்றார் டௌனி.

About UK TAMIL NEWS