தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கட்டளைப்படி துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவத்தினரின் பாரிய கட்டமைப்பை கொண்ட முகாங்களை தகர்த்து சுமார் 24 மணித்தியால நேரத்திற்குள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கு உதாரணமாக 1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்” நடவடிக்கையின் மூலம் முல்லைத்தீவு நகர் பிரதேசத்தில் சுமார் 5 சதுர கிலோமீற்றர் தூரத்தை விடுதலைப் புலிகள் 24 மணிநேரத்திற்குள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த வெற்றிச் சமரின் காரணமாக இராணுவத் தாக்குதலுக்கு அச்சுறுத்தலாக இருந்த சுமார் 15 கிலோமீற்றர் வெளி பிரதேசங்களும் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
இதன் பின்னர் அவ்விடங்களில் பொதுமக்கள் படிப்படியாக மீள்குடியேறியுள்ளனர்.
இந்நிலையில் தற்காலத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீட்பதற்கு பொதுமக்கள் ஜனநாயக ரீதியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் காணிகளில் சில பகுதிகளை இராணுவத்தினர் பொதுமக்களிடம் மீள கையளித்துள்ளனர்.
எனினும் பெருமளவு பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடம் படையினர் இன்னமும் மீள கையளிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமது காணிகளை இராணுவத்தினர் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பொதுமக்கள் தொடர்ந்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகள் கையளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அரசியல் தலைமைகள் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் பல்வேறு விதமான பேச்சு வார்த்தைகளில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர்.
இந்த பேச்சு வார்த்தைகளின் மூலம் பொதுமக்களின் காணிகளில் சில ஏக்கர் காணிகள் படிநிலைகளில் விடுவிப்பது என்றும் சில காணிகள் வாரக்கணக்கில் விடுவிப்பது என்று அரசியல் தலைமைகளுக்கும் படைத்தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளது
இதன்படி முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவக் கடடுப்பாட்டில் உள்ள பொதுமகளின் காணிகள் 6 வார காலத்தில் பொது மக்களிடம் படைத்தரப்பினர் கையளிக்கவுள்ளார்கள் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் இ.ரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் வவுனியாவில் கட்சி கூட்டம் ஒன்றை நடத்திய விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இரண்டு நாட்களில் கேப்பாப்புலவு இராணுவ முகாங்களை அகற்றி பொதுமக்களை மீள்குடியேறச் செய்ய தன்னால் முடியம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆயுதம் ஒன்றே தீர்வு என்று ஆயுத வழிப் போராட்டத்தை ஆரம்பித்த விடுதலைப் புலிகள், ஆயுதத்தாக்குதல்களின் மூலம் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை குறைந்தது 24 மணித்தியாளங்களில் மீட்டுள்ளனர்.
தற்பொழுது 48 மணிநேரத்தில் விநாயமூர்த்தி முரளிதரனால் (கருணா) கேப்பாப்புலவு இராணுவ முகாமை அகற்ற எவ்வாறு முடியும் என்பதே பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள இன்றைய கேள்வியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.