சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. தொடக்க பேட்ஸ்மேன் பகர் சமான் 114 ரன்னும், பாபர் ஆசம் 46 ரன்னும், மொகமது ஹபீஸ் 57 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஆமிர் வீசினார். முதல் ஓவரிலேயே இந்தியாவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 3-வது பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அடுத்து வந்த விராட் கோலிக்கு கேட்ச் மிஸ் செய்த போதிலும், அடுத்த பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். தவான் 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆமிரின் அபார பந்து வீச்சால் இந்தியா 33 ரன்களுக்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. இந்த மூன்று விக்கெட்டுக்களையும் ஆமிர் கைப்பற்றினார்.
அதன்பின் இந்திய அணியால் மீள முடியவில்லை. டோனி 4 ரன்னிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியா மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்தில் 76 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.
அதன்பின் வந்த ஜடேஜா 15 ரன்னிலும், அஸ்வின், பும்ப்ரா தலா ஒரு ரன்னிலும் அவுட்டாக இந்தியா 30.3 ஓவரில் 158 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஆமிர், ஹசன் அலி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.