இனப் பிரச்சினைக்குத் தீர்வாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
1958 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிச் சிங்களச் சட்டமே இன்று பல பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் தலைமை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இல்லாததைப் பற்றி பேசுவதை விட இருக்கும் விடயம் ஒன்றில் ஆம்பித்து முன்நோக்கிச் செல்ல வேண்டும். சிலர் இல்லாததைப் பேசுகின்றனர். ஆகவே இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுக்கான வழியைத் தேட முடியும்.
1991ஆம் ஆண்டு போர் கடுமையாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் முன்னாள் ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகையின் பொன், வெள்ளி, பவள விழாவில் கலந்து கொள்வதற்காகச் சேறும் சகதியும் நிறைந்த கொம்படிப் பாதையால் பல சிரமங்கள் மத்தியில் யாழ்ப்பாணத்துக்கு வந்தேன்.
தமிழர்கள் தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் நிலையை தனிச் சிங்களச் சட்டமே ஏற்படுத்தியது. இதனால்தான் போர் ஆரம்பமாகியது.ஒற்றுமையை கட்டியெழுப்பக் கூடிய தீர்வை நோக்கி ஒன்றாகப் பயணிப்போம்.
கத்தோலிக்க திருச்சபையின் பாடசாலைகள் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். சென் பற்றிக் கல்லுரி கல்விமான்கள் பலரையும் சமூகப் பிரக்ஞையுடைய பலரையும் உருவாக்கியுள்ளது. இதையிட்டு பெருமைப்படுகிறேன் -என்றார்.